TIS National என்னென்ன சேவைகளை வழங்குகிறது?
TIS National உடனடி தொலைபேசி, முன்பதிவுசெய்த தொலைபேசி மற்றும் தலத்தில் உரைபெயர்க்கும் சேவைகளை, தமது ஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசும் வாடிக்கையாளர்களுடன் தகவல் தொடர்புகொள்ள வேண்டியுள்ள ஆங்கிலம் பேசாத மக்களுக்கும் முகவர் அமைப்புகள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கும் வழங்குகிறது. இந்தச் சேவைகள் அவுஸ்திரேலியாவில் ஆங்கிலம் அல்லாத மொழி பேசுபவர்கள் சேவைகளையும் தகவல்களையும் சுதந்திரமாக அணுகும் ஆற்றலை அளிக்கின்றன.
ஆங்கிலம் அல்லாத மொழி பேசுபவர்கள் 131 450 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம், TIS National ஊடாக உடனடித் தொலைபேசி உரைபெயர்ப்பாளர்களை அணுகலாம். மாற்றாக, நீங்கள் ஒரு நிறுவனத்தை நேரடியாகத் தொடர்புகொண்டால், அவர்கள் உங்கள் சார்பாக ஒரு உரைபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்வர்.
TIS National ஊடாக நான் யாரைத் தொடர்புகொள்ளலாம்?
TIS National உடன் Department of Immigration and Border Protection உட்பட்ட 20,000 இற்கும் மேற்பட்ட ஏஜென்சி வாடிக்கையாளர்கள் தம்மைப் பதிவுசெய்துள்ளனர். எங்களுடைய ஏனைய வாடிக்கையாளர்களில் சிலர் வருமாறு:
- மாநில மற்றும் கூட்டரசு அரசாங்கத் திணைக்களங்கள்
- உள்ளூராட்சி சபைகள்
- மருத்துவ மற்றும் உடல்நல வைத்தியர்கள்
- மருந்தாளர்கள்
- பயனுடைமை நிறுவனங்கள்
- தொலைத்தொடர்புக் கம்பனிகள்
- அவசர சேவைகள்
- சட்ட சேவைகள்
- குடியேற்றம் மற்றும் சமூக சேவை வழங்குநர்கள்.
நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய நிறுவனம் ஆனது TIS National-இடமிருந்து உரைபெயர்ப்பாளர் உதவியுடனான அழைப்புகளை ஏற்றுக்கொள்கிறது என்பதை TIS National-ஆல் உத்தரவாதமளிக்க முடியாது.
TIS National-ஐ நான் எப்போது அழைக்கலாம்?
TIS National-இன் உடனடித் தொலைபேசி உரைபெயர்ப்பாளர் சேவையானது வருடம் முழுவதும் தினமும் 24 மணித்தியாலங்களும் கிடைக்கிறது.
நீங்கள் தொடர்புகொள்ளும் நிறுவனம், அவர்களது வழக்கமான வணிக நேரங்களில் மட்டுமே கிடைக்கக் கூடும், மேலும் வணிக நேரங்கள், நிறுவனங்களுக்கு இடையில் வேறுபடும். அவுஸ்திரேலியாவிலுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை, காலை 9 மணிக்கும் மாலை 5 மணிக்கும் இடையிலுள்ள தரநிலையான வணிக நேரங்களில் இயங்குகின்றன. பல நிறுவனங்கள் பொது விடுமுறைகளில் கிடைக்காது.
நான் 131 450 என்ற இலக்கத்தை அழைக்கும் போது, எதை எதிர்பார்க்க வேண்டும்?
நீங்கள் TIS National-ஐ அழைக்கும் போது, உங்களுக்கு ஆங்கிலம் பேசுகின்ற TIS National ஒப்பரேற்றர் ஒருவர் வணக்கம் கூறுவார், அவர் உங்களுக்கு என்ன மொழி உரைபெயர்ப்பாளர் வேண்டும் என்று கேட்பார். நீங்கள் ஒரு மொழிக்கு வேண்டுகோள் விடுத்த பின்னர், கிடைக்கின்ற உரைபெயர்ப்பாளர் ஒருவரை ஒப்பரேற்றர் தேடும் போது, உங்கள் அழைப்பு காத்திருப்பில் வைக்கப்படும். காத்திருப்பு இசை கேட்காவிட்டாலும் கூட, தயவுசெய்து தொடர்பிலேயே இருங்கள்.
உங்கள் மொழியில் ஒரு உரைபெயர்ப்பாளர் இருந்தால், ஒப்பரேற்றர் அந்த உரைபெயர்ப்பாளருடன் உங்களை இணைத்துவிடுவார் மற்றும் நீங்கள் எந்த நிறுவனத்தைத் தொடர்புகொள்ள வேண்டுமென உங்களிடம் கேட்பார். TIS National-ஐ நீங்கள் தொடர்புகொள்ளும் போது, நிறுவனத்தின் பெயர், அவர்களுடைய தொடர்புத் தொலைபேசி இலக்கம் மற்றும் அந்த நிறுவனத்துடனான உங்கள் வாடிக்கையாளர் அல்லது கணக்கு இலக்கம் (ஏதும் இருந்தால்) ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்கவும்.
எங்கள் ஒப்பரேட்டர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும் மற்றும் நீங்கள் எந்த நிறுவனத்தைத் தொடர்புகொள்ள வேண்டுமென அவர்கள் பரிந்துரைக்க முடியாது. நீங்கள் ஒரு உரைபெயர்ப்பாளருடன் இணைக்கப்பட்டதும், உரைபெயர்ப்பாளர் எல்லா உரைபெயர்ப்பு ஒதுக்கீடுகளின் போதும் நடுநிலையாகவே இருக்க வேண்டும் என்பதால், அவர் உங்களுடன் சம்பிரதாயமற்ற உரையாடலில் ஈடுபட மாட்டார்.
உரைபெயர்ப்பாளர் நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய TIS National ஒப்பரேற்றரிடம் கூறுவார். ஒப்பரேட்டர் உங்களையும் உரைபெயர்ப்பாளரையும் வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிறுவனத்தை அழைத்து, தொடர்புகொள்ள வைப்பதற்குத் தொடர்வார்.
உங்கள் மொழியில் உரைபெயர்ப்பாளர் எவரும் இல்லையென்றால், மீண்டும் விரைவில் அழைக்குமாறு ஒப்பரேற்றர் உங்களிடம் கேட்டுக்கொள்வார். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைப் பேசினால், மற்றொரு மொழியில் ஒரு உரைபெயர்ப்பாளரைக் கோர நீங்கள் விரும்பக் கூடும்.
TIS National என்னைத் தொடர்புபடுத்தும் உரைபெயர்ப்பாளரை நான் அறிந்துள்ளேன் என்றால், நான் என்ன செய்ய வேண்டும்?
உரைபெயர்ப்பாளரை உங்களுக்குத் தெரியும் என்பதை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் உரைபெயர்ப்பு அமர்வைத் தொடர விரும்புகிறீர்களா இல்லையா என்பது உங்கள் முடிவாகும். நீங்கள் அதே உரைபெயர்ப்பாளருடன் தொடர விரும்பவில்லை என்றால், TIS ஒப்பரேற்றரிடம் அல்லது நிறுவனத்திடம் கூறி, அழைப்பைத் துண்டியுங்கள்.
நான் ஒரு ஆண் அல்லது பெண் உரைபெயர்ப்பாளரை வேண்டுகோள் விடுக்கலாமா?
ஆம். நீங்கள் ஒரு குறிப்பிட பாலின உரைபெயர்ப்பாளரை விரும்பினால், TIS National ஒப்பரேற்றரிடம் அல்லது நீங்கள் தொடர்புகொள்கின்ற நிறுவனத்திடம் முடிந்தவரை விரைவில் கூறுங்கள். TIS National நீங்கள் வேண்டுகோள் விடுத்த பாலின உரைபெயர்ப்பாளரை உங்களுக்குத் தர முயற்சிப்பார்.
நான் குறிப்பிட்ட ஒரு சமயம் அல்லது கலாச்சாரப் பின்னணியுள்ள உரைபெயர்ப்பாளரை வேண்டுகோள் விடுக்கலாமா?
இல்லை. TIS National ஆனது உரைபெயர்ப்பாளர்களின் தரநிர்ணய மட்டம் மற்றும் கிடைக்கும்தன்மை முதலியவற்றின் அடிப்படையிலேயே அவர்களுக்கு வேலைகளை ஒதுக்கீடு செய்கிறார்கள். மேலும் உரைபெயர்ப்பாளர்களின் சமயம் அல்லது கலாச்சாரப் பின்னணியின் அடிப்படையில் தெரிவுசெய்ய மாட்டார்கள்.
நான் ஒரு உரைபெயர்ப்பாளரை நேரில் உபயோகிக்க விரும்பலாம். இது சாத்தியமா?
ஆம். TIS National ஆனது தளத்தில் இடம்பெறும் உரைபெயர்ப்புச் சேவைகளை வழங்குகின்றன. உங்களுக்கு தளத்தில் இடம்பெறும் உரைபெயர்ப்பாளர் தேவை என்றால், நீங்கள் தகவல்தொடர்பு கொள்ள வேண்டிய நிறுவனத்துடன் TIS National ஊடாக தொலைபேசியைப் பயன்படுத்தித் தொடர்புகொண்டு, உங்களுக்காக தளத்திலுள்ள உரைபெயர்ப்பாளர் ஒருவரை ஏற்பாடு செய்யுமாறு அவர்களிடம் கேளுங்கள்.
நான் அவசர சேவைகளைத் தொடர்புகொள்ள வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் அவசர அம்புலன்ஸ், காவல்துறை அல்லது தீயணைப்புச் சேவைகளைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றால், எப்போதுமே 000 என்ற இலக்கத்தை நேரடியாக அழையுங்கள். 000 என்ற அவசர சேவைகள் தொடர்பானது TIS National-ஐ அழைக்கும் மற்றும் ஆண்டு முழுவதும் தினமும் 24 மணித்தியாலமும் ஒரு முன்னுரிமை வரிசையைப் பயன்படுத்தி உரைபெயர்ப்பாளருடன் உங்களை இணைக்கும்.
TIS National சேவைகள் ஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசுபவர்களுக்கு இலவசமா?
ஆம். பெரும்பான்மையான TIS National சேவைகள் ஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசுபவர்களுக்கு இலவசம். பொதுவாக நீங்கள் தொடர்புகொள்ளும் நிறுவனம், சேவைக்கான கட்டணங்களை ஏற்றுக்கொள்ளும். சில நிறுவனங்களும் மருத்துவ சேவையளிப்பவர்களும் TIS National ஊடாக இலவச உரைபெயர்ப்பைப் பெறத் தகுதியானவர்கள்.
சில நிறுவனங்கள், TIS National-இடமிருந்து வரும் அழைப்புகளை ஏற்காமல் போகலாம், எனினும் நீங்கள் நிறுவனத்தை நேரடியாக அழைத்தால், அவர்கள் ஒரு தொலைபேசி உரைபெயர்ப்பாளருடன் உங்களைத் திரும்ப அழைக்க இயலக் கூடும்.
TIS National வாடிக்கையாளர் அல்லாத மற்றும் சேவைக்கான கட்டணங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத ஒரு நிறுவனத்தைத் தொடர்புகொள்ள நீங்கள் விரும்பினால், நீங்கள் ஒரு தனிப்பட்ட கணக்கை உருவாக்கி, அந்தச் சேவைக்கு நீங்களே கட்டணம் செலுத்த முடிவுசெய்யலாம். இதைச் செய்ய, மொழிபெயர்ப்பாளரிடம் கூறுங்கள், TIS National-உடன் ஒரு கணக்கை உருவாக்குவதற்கு எங்கள் ஒப்பரேட்டர்கள் உங்களுக்கு உதவுவர். ஒரு தனிப்பட்ட கணக்கை உருவாக்க உங்களுக்கு ஒரு கடன் அட்டை தேவைப்படும்.
நான் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை TIS National ஊடாகப் பெற்றுக் கொள்ளலாமா?
இல்லை. TIS National, வர்த்தக ஆவண மொழிபெயர்ப்புச் சேவையை வழங்குவதில்லை.
Department of Social Services (DSS), தகுதியுள்ள அவுஸ்திரேலிய குடிமக்களுக்கும், அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாகக் குடியேறுகின்ற புலம்பெயர்ந்தவர்களுக்கும் இலவச ஆவண மொழிபெயர்ப்புச் சேவையை வழங்குகிறது. இந்தச் சேவையைப் பற்றி விசாரிக்க, உங்கள் உள்ளூர் Adult Migrant English Program (AMEP) வழங்குநரைத் தொடர்புகொள்ளுங்கள்.
நீங்கள் National Accreditation Authority for Translators and Interpreters (NAATI) தொடர்புகொள்வதன் மூலம் ஏனைய மொழிபெயர்ப்பு விருப்பங்களைப் பற்றிய தகவலைக் கண்டுபிடிக்கலாம்.
நான் ஒரு உரைபெயர்ப்பாளரை அதிக வினைத்திறனாக எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
நீங்கள் பின்வருபவற்றின் மூலம் ஒரு TIS National உரைபெயர்ப்பாளரை அதிக வினைத்திறனாகப் பயன்படுத்தலாம்:
- TIS National-ஐ அழைக்கும் முன்னர், உங்கள் அழைப்புக்காக உங்களுக்கு தேவையான தகவல் அனைத்தையும் தயார்செய்தல்
- மீண்டும் பேச முன்னர், உரைபெயர்ப்பாளர் உரைபெயர்த்து முடியும் வரை பொறுமையாக இருத்தல் மற்றும் காத்திருத்தல்
- குறுகிய வசனங்களைப் பயன்படுத்துதல்
- மொழிபெயர்க்கக் கடினமாக இருக்கக் கூடிய கொச்சை மொழி அல்லது விளங்காத சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்
- உரைபெயர்ப்பாளரின் பங்கைப் புரிந்துகொள்ளுதல்
- ஆலோசனை கூறுமாறு அல்லது உங்களுக்காக வாதாடுமாறு உரைபெயர்ப்பாளரைக் கேட்காமல் இருத்தல்
- உரைபெயர்ப்பைப் புரிந்துகொள்வதில் உங்களுக்குக் கஷ்டம் இருந்தால், அதை உடனடியாக உரைபெயர்ப்பாளரிடம், நிறுவனத்திடம் அல்லது TIS National-இடம் தெரிவித்தல்.
TIS National உரைபெயர்ப்பாளரின் பங்கு என்ன?
உரைபெயர்ப்பாளரின் பங்கு என்னவென்றால் பேசப்படும் மொழியை உங்கள் மொழியில் முடிந்தவரை துல்லியமாக உரைபெயர்ப்பது ஆகும்.
உரைபெயர்ப்பாளர்கள் ஆலோசனையை வழங்குவதில்லை, TIS National ஒப்பரேற்றரால் அல்லது நீங்கள் தொடர்புகொள்கின்ற நபரால் வேண்டுகோள் விடுக்கப்படுவது தவிர வேறு கேள்விகள் எதையும் கேட்கக் கூடாது.
TIS National உரைபெயர்ப்பாளர்கள் ஒரு கடுமையான நன்னெறிக் கோட்பாட்டால் கட்டுண்டுள்ளனர். கோட்பாடானது அவர்களுடைய தொழில்சார் நடத்தையைக் கட்டுப்படுத்தி, பின்வருபவை உட்பட்ட பல்வேறு பொறுப்புகளை உள்ளடக்குகிறது:
- நிபுணத்துவ நடத்தை
- இரகசியத்தன்மை
- திறமை
- பாரபட்சமின்மை
- துல்லியம்
- பணி எல்லைகளின் தெளிவு
- தொழில்சார் உறவுகளைப் பேணுதல்
- தொழில்சார் அபிவிருத்தி
- தொழில்சார் உறுதிப்பாடு.
நன்னெறிக் கோட்பாடு பற்றிய மேலும் தகவல், Australian Institute of Interpreters and Translators (AUSIT)-இல் கிடைக்கிறது.
நான் TIS National-க்கு எவ்வாறு பின்னூட்டம் அளிப்பது?
TIS National சேவை, உரைபெயர்ப்பாளர் அல்லது ஒப்பரேட்டரைப் பற்றிய பின்னூட்டத்தை அளிக்க, 131 450 என்ற இலக்கத்தில் TIS National-ஐ அழைக்கவும். நீங்கள் ஒரு உரைபெயர்ப்பாளருடன் இணைக்கப்பட்டதும், நீங்கள் TIS National-க்கு பின்னூட்டம் அளிக்க விரும்புவதாக ஒப்பரேட்டரிடம் கூறுங்கள். உங்கள் பின்னூட்டமானது பதிவுசெய்யப்பட்டு, கருத்திலெடுப்பதற்காக TIS National-இலிலுள்ள தொடர்பான அணிக்கு அனுப்பப்படும்.
எனக்கு இலவசமாக ஆங்கிலம் கற்றுக்கொள்ளத் தகுதி இருக்கிறதா?
(தி அடல்ட் மைக்ரண்ட் இங்ளீஷ் புரோக்ராம்) The Adult Migrant English Program (AMEP) என்ற திட்டம், அவுஸ்திரேலிய சமுதாயத்தில் குடியமர்ந்து, அதில் பங்கேற்றுக் கொள்ள உதவுவதற்காகத், தகுதியடைகிற குடிவரவாளர்களுக்கு இலவச ஆங்கில மொழித் தனிப்பயிற்சியைத் தருகிறது (https://immi.homeaffairs.gov.au/settling-in-australia/amep/about-the-program) .
AMEP திட்டம், குடும்ப, திறன்வாய்ந்தோர் மற்றும் மனிதாபிமான வீசா வகைகளில் இருந்து வரும் 18 வயதிற்கு மேற்பட்ட குடிவரவாளர்களுக்குக் கிடைக்கிறது, இதில் நிரந்தர வீசாக்களை வைத்திருப்போரும், சிலவகை தற்காலிக வீசாக்களை வைத்திருப்போரும் அடங்குவர். தகுதியடைகிற வீசாக்களில் இருக்கிற அவர்களைச் சார்ந்திருப்போர் இதில் கற்றுக்கொள்ள இயலும், அதோடு 15 – 17 வயதுடைய குடிவரவாளர்களும், சில சூழ்நிலைகளில் பங்கேற்றுக் கொள்ளலாம். பள்ளி செல்லும் வயதைவிடக் குறைவான வயதுடைய குழந்தைகளை வைத்திருப்போருக்குக், நேரில் நடைபெறும் வகுப்புகளுக்கு வருகையில், இலவசக் குழந்தைப் பராமரிப்பு வசதி கிடைக்கிறது.
நீங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவுவதற்காக, AMEP திட்டத்தில் பல்வேறு விதமான, வசதிக்கேற்ப கற்றுக்கொள்ளும் வழிவகைகள் உள்ளன, அதில் நேரில் கற்றுக்கொள்ளும் (கோவிட்-பாதுகாப்பான) வகுப்புகள், இணைய வகுப்புகள், தன்னார்வத் தொண்டர் தனிப்பயிற்சித் திட்டம் மற்றும் தொலைதூரக் கல்வித் திட்டம் ஆகியவை அடங்குகின்றன. நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொருத்து, முழு நேர, பகுதி நேர, மாலைநேர மற்றும் வார இறுதி வகுப்புகளும் கிடைக்கலாம்.
இலவசமாக எவ்விதம் ஆங்கில கற்க ஆரம்பிப்பது என்பதைத் தெரிந்து கொள்ள, உங்களுக்கு அருகாமையில் இருக்கிற AMEP திட்டம் வழங்கும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள் (https://immi.homeaffairs.gov.au/settling-in-australia/amep/service-providers) அல்லது இந்த www.homeaffairs.gov.au/amep இணையதளம் சென்று பாருங்கள்
Share this page
Facebook Twitter